செய்திகள்

இந்தியா வந்த லிச்சென்ஸ்டைன் இளவரசர் அலோயிஸ்! வரவேற்ற குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி!

இந்தியா வந்த லிச்சென்ஸ்டைன் இளவரசர் அலோயிஸ்! வரவேற்ற குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி!

ஐரோப்பிய நாடான லிச்சென்ஸ்டைனின் பட்டத்து இளவரசர் அலோயிஸ், நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக அக்டோபர் 25ஆம் தேதி இந்தியா வந்தார். அக்டோபர் 25 முதல் 28ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் பயணம், இந்தியா–லிச்சென்ஸ்டைன் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அமைந்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் இந்தியா வந்துள்ள இளவரசர் அலோயிஸுடன், அவரது மனைவி இளவரசி சோஃபி மற்றும் உயர்மட்ட அதிகாரிகள், தொழில்துறை பிரதிநிதிகள் அடங்கிய குழுவினரும் வந்துள்ளனர். மும்பை வந்தடைந்த அவர், பின்னர் வதோதரா வழியாக டெல்லி சென்றார்.

இந்தப் பயணத்தின்போது பிரதமர் மோடியுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. வர்த்தகம், முதலீடு, அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் இருநாட்டு மக்களிடையிலான தொடர்புகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

மேலும், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்திக்கும் இளவரசர் அலோயிஸுக்கு, குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறப்பு விருந்தும் அளிக்கப்பட உள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் அவரைச் சந்திக்கிறார்.

இந்தியா மற்றும் ஐரோப்பிய சுதந்திர வர்த்தகக் கூட்டமைப்பு (EFTA) இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தம் 2025ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்ததைத் தொடர்ந்து, இருநாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிப்பதிலும் இந்தப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.