சென்னை ரயில்வே கோட்டத்தில் ரூ.12.36 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்!
சென்னை ரயில்வே கோட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாதங்களில், ரயில்வே பாதுகாப்புப் படையினர் நடத்திய சோதனைகளில் ரூ.12.36 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள், ஹவாலா பணம், தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ரயில்களில் போதைப்பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்கும் நடவடிக்கையில், ரூ.8.09 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள், புகையிலைப் பொருட்கள் மற்றும் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில், சர்வதேசச் சந்தை மதிப்பில் ரூ.5 கோடி மதிப்புள்ள 5 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவும் அடங்கும். இது தொடர்பாக 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், உரிய ஆவணங்களின்றி ஹவாலா பணம், தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களைக் கொண்டு சென்றதாக 24 சம்பவங்களில் 31 பேர் பிடிபட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.4.27 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதுதவிர, ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் ஆதரவின்றி இருந்த, காணாமல் போன மற்றும் வீட்டை விட்டு வெளியேறிய 242 குழந்தைகளை ரயில்வே பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர். பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், சட்டவிரோதச் செயல்களைத் தடுக்கவும் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
