ரஞ்சி கோப்பை: ரயில்வேஸ் 184 ரன்களுக்கு ஆல் அவுட்! 113 ரன்கள் பின்தங்கிய தமிழ்நாடு அணி!
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், ரயில்வேஸ் அணி 184 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதற்குப் பதிலளித்து விளையாடிய தமிழ்நாடு அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் ரயில்வேஸ் அணியைவிட தமிழ்நாடு 113 ரன்கள் பின்தங்கியுள்ளது.
அக்டோபர் 26ஆம் தேதி சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் தொடங்கிய இந்தப் போட்டியில், டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தொடக்கத்தில் சிறப்பாகப் பந்துவீசிய தமிழ்நாடு அணி, ரயில்வேஸ் அணியின் விக்கெட்டுகளைத் தொடர்ந்து வீழ்த்தியது.
தமிழ்நாடு அணியின் சோனு யாதவ் மற்றும் கேப்டன் சாய் கிஷோர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஹெம்சுதேஷன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரயில்வேஸ் அணியில் ஜுபைர் அலி அதிகபட்சமாக 75 ரன்கள் எடுத்தார். கடைசி விக்கெட்டுக்கு ஜுபைர் அலி மற்றும் ஹிமான்ஷு சங்வான் இணைந்து 61 ரன்கள் சேர்த்ததால், ரயில்வேஸ் அணி 184 ரன்களை எட்டியது.
தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தமிழ்நாடு அணியில், நாராயண் ஜெகதீசன் 30 ரன்களும், பிரதோஷ் ரஞ்சன் பால் 19 ரன்களும் எடுத்தனர். முதல் நாள் முடிவில் பாபா இந்திரஜித் மற்றும் ஆண்ட்ரே சித்தார்த் களத்தில் இருந்தனர். இரண்டாம் நாள் ஆட்டத்தில் தமிழ்நாடு அணி எவ்வாறு மீண்டு வருகிறது என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
