நெகட்டிவ் கமெண்ட்களை நான் பார்ப்பதே இல்லை! சிவகார்த்திகேயன் விளக்கம்!
சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி வெளியாகும் எதிர்மறையான விமர்சனங்கள் மற்றும் ட்ரோல்களை எப்படிக் கையாள்கிறார் என்பது குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் விளக்கமளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், தற்போது இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் ‘சேயோன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவரிடம் சமூக வலைதளங்களில் வரும் எதிர்மறையான கருத்துகளை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த சிவகார்த்திகேயன், தனக்கு ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் இருந்தாலும், அவற்றைத் தனது குழுவினரே நிர்வகிப்பதாகத் தெரிவித்தார். சமூக வலைதளங்களில் வரும் கருத்துகளைத் தாம் நேரடியாகப் படிப்பதில்லை என்றும் கூறினார்.
மேலும், தற்போது இரண்டு திரைப்படங்களில் பணியாற்றி வருவதாகவும், இரண்டு கதைகளுக்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், மேலும் மூன்று திரைப்படங்கள் தயாரிப்புக்காகத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தனது குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும், ரசிகர்களுடனும் நேரத்தைச் செலவிடுவது முக்கியம் எனக் குறிப்பிட்ட அவர், தன்னைச் சுற்றி பல நேர்மறையான விஷயங்கள் இருக்கும்போது, முகம் தெரியாத ஒருவரின் எதிர்மறையான கருத்து தன்னை எவ்வாறு பாதிக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.
எதிர்மறையான கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், தனது வேலை மற்றும் குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்துவதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
