ரூ.100 கோடி மோசடி வழக்கு: அன்பில் மகேஸின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் மற்றும் அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கும் மேல் பணம் வசூலித்ததாக எழுந்த புகாரில், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் 1,000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளிடம் பணம் வசூலித்ததாகக் கூறப்படும் இந்த விவகாரத்தில், இதுவரை 177 புகார்கள் வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அன்பில் மகேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக இருப்பதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், வழக்கின் விசாரணை ஆரம்பக்கட்டத்தில் இருப்பதால், அவரைக் காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகக் காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வி. லட்சுமிநாராயணன், அன்பில் மகேஷின் முன்ஜாமீன் மனுவை அக்டோபர் 26-ஆம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து, அதே நாளில் அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
