செய்திகள்

‘மூக்குத்தி அம்மன் 2’ என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமான திரைப்படம் – நடிகை நயன்தாரா!

‘மூக்குத்தி அம்மன் 2’ என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமான திரைப்படம் – நடிகை நயன்தாரா!

படப்பிடிப்பு முடிந்த பிறகும் சில திரைப்படங்கள் நம் இதயத்திற்கு மிகவும் நெருக்கமாக நிலைத்திருக்கும். என்னைப் பொறுத்தவரை, ‘மூக்குத்தி அம்மன் 2’ அத்தகைய ஒரு திரைப்படம் என்று நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் இயக்குநர் சுந்தர் சி அவர்களின் தொலைநோக்குப் பார்வை, அன்பான அணுகுமுறை மற்றும் அர்ப்பணிப்புக்கு நன்றி தெரிவித்துள்ள நயன்தாரா, அவருடன் பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். படத்தின் ஒவ்வொரு தருணத்திலும் அவர் செலுத்திய அக்கறை, இந்தப் பயணத்தை மறக்க முடியாததாக மாற்றியதாகவும், இப்படத்திற்காக அவருக்கு எப்போதும் கடமைப்பட்டிருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், இப்படத்தை நம்பி தயாரித்த தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். ஒரு கதையை முழு மனதுடன் நம்பும் தயாரிப்பாளர் கிடைப்பது, இந்தப் பயணத்தின் ஒவ்வொரு அடியையும் அர்த்தமுள்ளதாக மாற்றியதாகக் கூறியுள்ளார்.

நடிகை ரெஜினாவுடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்ட நயன்தாரா, அவரது எதிர்காலப் பயணங்கள் அனைத்திலும் அன்பும் வெற்றியும் கிடைக்க வாழ்த்தியுள்ளார். அதேபோல், குஷ்பு மற்றும் சினேகா ஆகியோருடன் இணைந்து இப்படத்தில் பணியாற்றியது என்றும் போற்றிப் பாதுகாக்கக்கூடிய அனுபவம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அற்புதமான நடிகர்கள் மற்றும் படக்குழுவினருடன் இணைந்து இப்படத்தில் பணியாற்றியதைப் பாக்கியமாகக் கருதுவதாகவும், அனைவரும் இணைந்து உருவாக்கியுள்ள இந்தத் திரைப்பட உலகத்தை ரசிகர்கள் திரையில் காண்பதற்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இறுதியாக, “ஓம் சக்தி” எனக் குறிப்பிட்டு தனது நன்றியையும் அன்பையும் பகிர்ந்துகொண்டுள்ளார் நடிகை நயன்தாரா.