செய்திகள்

அஜித்தின் ‘டேர் டெவில்’ படத்துக்கு நவம்பர் 2-ல் பூஜை!

அஜித்தின் ‘டேர் டெவில்’ படத்துக்கு நவம்பர் 2-ல் பூஜை!

நடிகர் அஜித் குமார் நடிப்பில், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘டேர் டெவில்’ திரைப்படத்தின் பூஜை நவம்பர் 2ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தீபாவளிக்குப் பிறகு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘குட் பேட் அக்லி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜித் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இரண்டாவது முறையாக இணையும் படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அஜித்தின் 64-வது படமாக உருவாகும் இதனை, அவரது மனைவி ஷாலினி அஜித்குமார், ‘பிரேவ் ஹார்ட்ஸ் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.

முதற்கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நவம்பர் 12 அல்லது 13ஆம் தேதி தொடங்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மலேசியா மற்றும் பாங்காக்கிலும் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்படத்தில் நடிகர்கள் ஸ்ரீலீலா, பிரபு, பார்த்திபன் மற்றும் சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், முழுமையான நடிகர் பட்டியல் மற்றும் படப்பிடிப்பு அட்டவணை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வேண்டியுள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளதால், ‘டேர் டெவில்’ படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.