பிரபல சின்னத்திரை நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்!
பிரபல சின்னத்திரை மற்றும் திரைப்பட நடிகை வத்சலா ராஜகோபால் சென்னையில் வயது மூப்பால் காலமானார். அவருக்கு வயது 93.
திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்த வத்சலா ராஜகோபால், திருமணத்திற்குப் பிறகு சென்னையில் குடியேறினார். ஆரம்பத்தில் அசோக் லேலண்ட் மற்றும் ஏஜிஎஸ் நிறுவனங்களில் பணியாற்றி வந்த அவர், நாடகங்கள் மீது கொண்ட ஆர்வத்தால் நடிப்புத் துறையில் நுழைந்தார்.
இயக்குநர் கே. பாலச்சந்தரின் ‘ரோஜா’ திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து ‘ரிதம்’, ‘மொழி’, ‘முனி’, ‘வின்னர்’ உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சின்னத்திரையில் 200-க்கும் மேற்பட்ட தொடர்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். ‘கதை நேரம்’, ‘அப்புசாமியும் சீதாப்பாட்டியும்’, ‘பல்லாங்குழி’, ‘கையளவு மனசு’, ‘மனிதரில் இத்தனை நிறங்களா’ உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார். மேலும், ஸ்ரீதரின் மெரினா நாடகக் குழுவிலும் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
வயது மூப்பு மற்றும் கல்லீரல் பாதிப்பு காரணமாக சென்னை பல்லாவரத்தில் உள்ள தனது வீட்டில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் அவர் உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை குரோம்பேட்டையில் நடைபெறுகிறது.
அவருக்கு கண்ணன், சுரேஷ், சிவாஜி ஆகிய மகன்களும், காயத்ரி என்ற மகளும் உள்ளனர். அவரது மறைவுக்கு சின்னத்திரை நடிகர் சங்கத்தினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
