வாரணாசியில் இந்திய விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி – நேரில் பார்வையிட்ட பிரதமர் மோடி!

வாரணாசியில் இந்திய விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி – நேரில் பார்வையிட்ட பிரதமர் மோடி!

இந்திய விமானப்படையின் 94-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற பிரம்மாண்ட வான் சாகச நிகழ்ச்சியைப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் பார்வையிட்டார். அக்டோபர் 25-ஆம் தேதி நமோ காட் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ‘Wings Over Ganges’ எனப் பெயரிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்திய விமானப்படையின் திறன் மற்றும் விமானிகளின் சாகசத் திறமையை வெளிப்படுத்தும் வகையில், சுகோய்-30 எம்.கே.ஐ., உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானம், ரஃபேல் உள்ளிட்ட போர் விமானங்களும், பிரசந்த் இலகுரகப் போர் ஹெலிகாப்டரும் வானில் சாகசங்களை நிகழ்த்தின.

மேலும், சூர்ய கிரண் ஏரோபாட்டிக் குழுவினர் ஒருங்கிணைந்த வான் சாகசங்களை நிகழ்த்தினர். மூன்று கிரண் விமானங்கள் இந்திய தேசியக் கொடியின் வண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் ‘V’ வடிவில் பறந்தது பார்வையாளர்களைக் கவர்ந்தது. தேசியக் கொடியை ஏந்திய எம்.ஐ.-17 ஹெலிகாப்டர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றன.

கங்கை நதியின் கரையோரத்தில் நடைபெற்ற இந்த வான் சாகச நிகழ்ச்சி, இந்திய விமானப்படையின் தொழில்நுட்பத் திறனையும் செயல்பாட்டுத் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.