சென்னையில் டெங்கு தடுப்பு நடவடிக்கை: 43 டன் கழிவுகள் அகற்றம்!
சென்னையில் டெங்கு காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பெருநகர சென்னை மாநகராட்சி தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அக்டோபர் 1 முதல் 24-ஆம் தேதி வரை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் தேங்கியிருந்த தேவையற்ற பொருட்கள் அகற்றப்பட்டுள்ளன.
இதன்படி, பயன்படுத்தப்பட்ட பழைய டயர்கள் 8,373 கிலோவும், பிளாஸ்டிக் உள்ளிட்ட தேவையற்ற பொருட்கள் 35,056 கிலோவும் என மொத்தம் 43,429 கிலோ கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. மேலும், கொசு ஒழிப்பு மற்றும் காய்ச்சல் தடுப்புப் பணிகளில் 3,703 களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதுடன், விதிமீறல்களில் ஈடுபடும் இடங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் ஜனவரி 1 முதல் அக்டோபர் 24 வரை கொசுப்புழு உற்பத்தி கண்டறியப்பட்ட இடங்களில் இருந்து ரூ.37.05 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் மட்டும் ரூ.11.44 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
மழைக்காலத்தில் பழைய டயர்கள், தேங்காய் சிரட்டைகள், பூந்தொட்டிகள் மற்றும் திறந்த கொள்கலன்களில் மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும், வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
