செய்திகள்

சபரிமலையில் தினமும் 80,000 பக்தர்களுக்கு அனுமதி!

சபரிமலையில் தினமும் 80,000 பக்தர்களுக்கு அனுமதி!

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல–மகரவிளக்கு கால தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு வரும் அக்டோபர் 29ஆம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்குகிறது. இதற்கான அறிவிப்பைத் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான மண்டல–மகரவிளக்கு யாத்திரைக் காலம் நவம்பர் 16ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், பக்தர்கள் தரிசனத்திற்கான நேரத்தை முன்கூட்டியே இணையதளம் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம். இதற்காக www.sabarimalaonline.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பயன்படுத்த வேண்டும்.

நிலக்கல்–பம்பை வழியாக தினமும் 60,000 பக்தர்களுக்கும், எருமேலி வனப்பாதை மற்றும் வண்டிப்பெரியார்–சத்திரம் வழியாக தலா 3,000 பக்தர்களுக்கும் ஆன்லைன் முன்பதிவு மூலம் அனுமதி வழங்கப்படும். மேலும், நிலக்கல், எருமேலி மற்றும் வண்டிப்பெரியார்–சத்திரம் ஆகிய இடங்களில் நேரடி முன்பதிவு வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு நாளைக்கு ஆன்லைன் மற்றும் நேரடி முன்பதிவு உட்பட மொத்தம் 80,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பம்பையில் நேரடி முன்பதிவு வசதி கிடையாது. ஆன்லைன் முன்பதிவு இலவசமாகும். பக்தர்கள் தங்களின் தரிசனத் தேதியை முன்கூட்டியே திட்டமிட்டுப் பயணத்தை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.