செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட இலவசப் பேருந்துப் பயணம்!

மாற்றுத்திறனாளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட இலவசப் பேருந்துப் பயணம்!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவசப் பேருந்துப் பயணத் திட்டத்தை அரசு விரிவுபடுத்தியுள்ளது. இதன்படி, 40 சதவீதம் அல்லது அதற்கு மேல் மாற்றுத்திறன் கொண்டவர்கள், தங்களுடன் ஒருவரைத் துணையாளராக அழைத்துச் செல்லவும் இலவசப் பயணச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 27ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையின்படி, நகர சாதாரணப் பேருந்துகள், விரைவுப் பேருந்துகள், தாழ்தளப் பேருந்துகள், LSS மற்றும் டீலக்ஸ் பேருந்துகள் உள்ளிட்ட பல்வேறு அரசு பேருந்துகளில் இந்தச் சலுகையைப் பயன்படுத்தலாம். புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில் இயக்கப்படும் சாதாரணக் கட்டணப் பேருந்துகளிலும் பயணம் செய்யலாம். ஆனால், குளிர்சாதனப் பேருந்துகளுக்கு இந்தச் சலுகை பொருந்தாது.

இந்தச் சலுகையைப் பெற 16 இலக்க UDID அடையாள அட்டையைக் கொண்டிருக்க வேண்டும். பேருந்து நடத்துநரிடம் அட்டையைக் காண்பித்தால், பயணத்தைக் கணக்கிடுவதற்காகக் கட்டணமில்லா பயணச்சீட்டு வழங்கப்படும். இதற்கு முன்பு வழங்கப்பட்ட 2026–27ஆம் ஆண்டுக்கான இலவசப் பயண அட்டைகளுக்குப் பதிலாக UDID அட்டை அடிப்படையிலான நடைமுறை அமலுக்கு வருகிறது.

திட்ட விரிவாக்கத்திற்காக அரசு கூடுதலாக ரூ.7.90 கோடி ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்காகப் பயணம் செய்வது எளிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஏ.ஐ. உதவி உபகரணங்கள் வாங்க 50% மானியம்!

மாற்றுத்திறனாளிகள் நவீன ஏ.ஐ. அடிப்படையிலான உதவி உபகரணங்களை வாங்குவதற்கு, அதன் விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.30,000 வரை மானியம் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2026–27ஆம் நிதியாண்டில் முதற்கட்டமாக 1,000 பயனாளிகளுக்கு இத்திட்டத்தைச் செயல்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுப் போட்டிகளுக்கான செயற்கைக் கால்கள், தசை மின் சைகைகள் மூலம் இயங்கும் செயற்கை மேல் உறுப்புகள், காக்லியர் இம்ப்ளான்ட் பேட்டரிகள் உள்ளிட்ட நவீன உபகரணங்கள் இத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.