ஹார்முஸ் ஜலசந்தியில் இந்தியர்கள் பயணித்த எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதல்!
ஓமன் அருகே அமைந்துள்ள ஹார்முஸ் ஜலசந்தியில் பயணித்த பனாமா நாட்டுக் கொடியுடன் கூடிய எண்ணெய்க் கப்பல் மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. MT Louise 1 என்ற அந்தக் கப்பலில் 27 இந்திய மாலுமிகள் பயணித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் இந்தியர்கள் உட்பட கப்பலில் இருந்த அனைத்து மாலுமிகளும் பாதுகாப்பாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அக்டோபர் 29-ம் தேதி ஓமனின் கசாப் பகுதியிலிருந்து சுமார் 46 கிலோமீட்டர் தொலைவில் இந்தச் சம்பவம் நடைபெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடல்சார் பாதுகாப்பு வட்டாரங்கள் அளித்த தகவலின்படி, சிறிய படகு மூலம் கப்பலின் அடிப்பகுதியில் ‘லிம்பெட் மைன்ஸ்’ எனப்படும் காந்தத்தின் உதவியுடன் பொருத்தப்படும் வெடிகுண்டுகள் இணைக்கப்பட்டுள்ளன. அவை வெடித்ததில் கப்பலின் இயந்திர அறையில் தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் கப்பல் பணியாளர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் வெளியிட்ட தகவலில், கப்பலில் இருந்த 27 இந்திய மாலுமிகளும் காயமின்றி பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், அக்டோபர் 29-ம் தேதி இதே கடற்பகுதியில் MT Arzanah என்ற மற்றொரு கப்பலும் தாக்குதலுக்கு உள்ளானது. அதில் பயணித்த இரண்டு இந்தியர்களும் பாதுகாப்பாக இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களின் பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்துள்ள நிலையில், இந்திய மாலுமிகளின் பாதுகாப்பை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது
