செய்திகள்

தமிழகத்தின் புதிய பேட்டரி எரிசக்தி சேமிப்புக் கொள்கை – 2029க்குள் 10 GW இலக்கு!

தமிழகத்தின் புதிய பேட்டரி எரிசக்தி சேமிப்புக் கொள்கை – 2029க்குள் 10 GW இலக்கு!

தமிழகத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில், பேட்டரி மூலம் மின்சாரத்தைச் சேமிக்கும் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான புதிய எரிசக்தி சேமிப்புக் கொள்கை 2026 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 2029ஆம் ஆண்டுக்குள் 10 GW அளவிலான பேட்டரி எரிசக்தி சேமிப்புத் திறனை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொள்கையின்படி, 1 MW மற்றும் அதற்கு மேற்பட்ட திறன் கொண்ட புதிய சூரிய மின்சாரத் திட்டங்களில், குறைந்தபட்சம் 10 சதவீத அளவிற்கு பேட்டரி சேமிப்பு வசதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரிகள் தொடர்ந்து 4 மணி நேரம் மின்சாரத்தை வழங்கும் திறன் கொண்டிருக்க வேண்டும். இந்த நடைமுறை 2027 ஏப்ரல் 1 முதல் செயல்பாட்டுக்கு வரும்.

மேலும், தகுதியுள்ள பேட்டரி சேமிப்புத் திட்டங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு மின்சாரப் பரிமாற்றம் மற்றும் வீலிங் கட்டணங்களில் 100 சதவீத விலக்கு வழங்கப்படுகிறது. முதல் கட்டமாக 2,500 MW / 10,000 MWh பேட்டரி சேமிப்புத் திறனை போட்டி ஏல முறையில் உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழகம் (TNGECL) ஒருங்கிணைப்பு அமைப்பாகச் செயல்படும். இதன் மூலம் பகல் நேரங்களில் உற்பத்தியாகும் உபரி சூரிய மின்சாரத்தைச் சேமித்து, மாலை மற்றும் அதிக மின்தேவை உள்ள நேரங்களில் பயன்படுத்த முடியும். இதனால் மின்சார வீணாவதைத் தடுப்பதுடன், மின் விநியோகக் கட்டமைப்பையும் மேம்படுத்த முடியும் என அரசு தெரிவித்துள்ளது.