செய்திகள்

23 நாட்களாகியும் கிடைக்காத சிறுமி! – காடுகளில் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தும் சிபி-சிஐடி!

23 நாட்களாகியும் கிடைக்காத சிறுமி! – காடுகளில் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தும் சிபி-சிஐடி!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே காணாமல் போன 7 வயது சிறுமி ஹேமலதாவைத் தேடும் பணியை சிபி-சிஐடி போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். சிறுமி காணாமல் போய் 20 நாட்களாகியும் இதுவரை எந்தத் தகவலும் கிடைக்காததால், சுற்றுவட்டார வனப்பகுதிகளில் தேடுதல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

அலம்பூண்டி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள காடுகளில் வனத்துறையினருடன் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட சிபி-சிஐடி முடிவு செய்துள்ளது. கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி அதிகாலை பெற்றோர் தூங்கிக் கொண்டிருந்தபோது சிறுமி காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. முதலில் உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தினர். 10 நாட்களாகியும் எந்தத் துப்பும் கிடைக்காததால் வழக்கு சிபி-சிஐடிக்கு மாற்றப்பட்டது.

இதற்கிடையே சிறுமியின் தாய் பவானி, தந்தை வடிவேலு, பாட்டி சாந்தி மற்றும் அக்கா விஜயலட்சுமி ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சிறுமி படித்த பள்ளியின் வருகைப் பதிவேடுகள் ஆய்வு செய்யப்பட்டதுடன், ஆசிரியர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், சம்பவம் நடந்த அன்று நள்ளிரவு அலம்பூண்டி பகுதியில் செயல்பாட்டில் இருந்த மூன்று செல்போன் கோபுரங்களிலிருந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அந்த நேரத்தில் செயல்பாட்டில் இருந்த 600-க்கும் மேற்பட்ட செல்போன் எண்களை போலீசார் ஆய்வு செய்து, சந்தேகத்திற்குரிய எண்களைக் கண்காணித்து வருகின்றனர்.

சிறுமி குறித்து இதுவரை உறுதியான தகவல் கிடைக்காத நிலையில், தேடுதல் மற்றும் விசாரணையை சிபி-சிஐடி தொடர்ந்து தீவிரப்படுத்தியுள்ளது.