காசி தமிழ் சங்கமம் 5.0 – 1,000 கல்லூரி மாணவர்களுக்கு ரூ.10,000 உதவித்தொகை!
தமிழகத்திற்கும் காசிக்கும் இடையிலான பாரம்பரிய, கலாச்சார மற்றும் கல்வி உறவுகளை மேம்படுத்தும் நோக்கில், காசி தமிழ் சங்கமத்தின் 5-வது பதிப்பு நவம்பர் 28 முதல் டிசம்பர் 12 வரை நடைபெற உள்ளது. மத்திய கல்வி அமைச்சகத்தின் சார்பில், ஐஐடி மெட்ராஸ் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுடன் இணைந்து இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது.
இந்த ஆண்டின் கருப்பொருளாக ‘திருக்குறள் பயில்வோம்’ அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திருவள்ளுவரின் திருக்குறள் கருத்துகள் இந்தியா முழுவதும் உள்ள மாணவர்களிடம் கொண்டு செல்லப்பட உள்ளன.
இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், விவசாயிகள், கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 1,500 பேர் பங்கேற்க உள்ளனர்.
மேலும், நாடு முழுவதும் உள்ள 1,000 உயர்கல்வி நிறுவனங்களில் இருந்து தலா ஒரு மாணவர் தேர்வு செய்யப்பட்டு, திருக்குறள் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் தயாரிக்க வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு மாத காலப் பயிற்சிக்காக ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
இதற்கான பதிவு அக்டோபர் 15ஆம் தேதி தொடங்கிய நிலையில், நவம்பர் 13ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. காசி, பிரயாக்ராஜ் மற்றும் அயோத்தி ஆகிய இடங்களில் பல்வேறு கலாச்சார மற்றும் கல்வி நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
