செய்திகள்

ரஜினியின் ‘தர்மன்’ படத்தில் இணைந்த ஸ்ரீலீலா!

ரஜினியின் 'தர்மன்' படத்தில் இணைந்த ஸ்ரீலீலா!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிகை ஸ்ரீலீலா இணைந்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீலீலாவின் அறிமுக வீடியோவையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ ஆகிய படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்கி வருகிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம், ஆர். மகேந்திரனுடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறது. ரஜினிகாந்தின் 173-வது படமாக உருவாகும் இதில் அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தில் ரஜினிகாந்த் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், நயன்தாரா, சிம்ரன், ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தெலுங்கு நடிகர் ராம் பொதினேனியும் இப்படத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே நயன்தாரா இப்படத்தில் இணைந்துள்ளதாகப் படக்குழு அறிவித்திருந்த நிலையில், தற்போது ஸ்ரீலீலாவும் இணைந்துள்ளார். இதன் மூலம் முதல் முறையாக ரஜினிகாந்துடன் ஸ்ரீலீலா இணைந்து நடிக்க உள்ளார்.

இப்படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது அடுத்தகட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தை 2027-ம் ஆண்டு திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது. ரஜினிகாந்த், நயன்தாரா, ஸ்ரீலீலா என முன்னணி நட்சத்திரங்கள் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.