செய்திகள்

தீபாவளிக்கு முன் ஆவின் பொருட்கள் விலை உயர்வு!

தீபாவளிக்கு முன் ஆவின் பொருட்கள் விலை உயர்வு!

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், ஆவின் நிறுவனத்தின் நெய், வெண்ணெய் மற்றும் இனிப்பு வகைகள் உள்ளிட்ட பால் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய விலை உயர்வு நாளை (அக். 28) முதல் அமலுக்கு வருகிறது.

மூலப்பொருட்களின் விலை உயர்வு, கொள்முதல் செலவுகள் மற்றும் இதர செலவினங்கள் அதிகரித்துள்ளதால் இந்த விலை மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 100 கிராம் ஆவின் நெய் விலை ரூ.10 உயர்ந்து ரூ.95 ஆகவும், ஒரு லிட்டர் நெய் ரூ.80 உயர்ந்து ரூ.770 ஆகவும் அதிகரித்துள்ளது. 100 கிராம் வெண்ணெய் ரூ.70 ஆகவும், அரை கிலோ வெண்ணெய் ரூ.320 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், கால் கிலோ பால்கோவா ரூ.150 ஆகவும், மைசூர்பாக் ரூ.160 ஆகவும், 200 மில்லி லிட்டர் லஸ்ஸி ரூ.23 ஆகவும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. ரசகுல்லா மற்றும் குலோப் ஜாமுன் உள்ளிட்ட இனிப்பு வகைகளின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வால் தீபாவளிக்காக நெய் மற்றும் இனிப்புப் பொருட்களை வாங்கும் பொதுமக்களின் செலவுகள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேவேளையில், கூடுதல் வருவாயில் 90 சதவீதத்திற்கும் அதிகமான தொகை பால் உற்பத்தியாளர்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்படும் என ஆவின் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.