‘மூக்குத்தி அம்மன் 2: மஹாசக்தி’ டீசர் வெளியீடு – நவம்பர் 6 திரையரங்குகளில் நயன்தாரா!
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில், இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2: மஹாசக்தி’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ‘Rise of Mahasakthi’ என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த டீசர், படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பர் 6-ம் தேதி ‘மூக்குத்தி அம்மன் 2: மஹாசக்தி’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக இப்படம் வெளியாக உள்ளது.
நட்சத்திர பட்டாளத்துடன் ‘மூக்குத்தி அம்மன் 2’
சுந்தர். சி இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாராவுடன் ஊர்வசி, யோகி பாபு, துனியா விஜய், ‘மைனா’ நந்தினி, ‘கருடா’ ராம், அபிநயா, சிங்கம் புலி, வி.ஆர். சுவாமிநாதன், சுனில் வர்மா, வர்ஷினி வெங்கட், பழ. கருப்பையா, நிதின் சத்யா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மித்தலாஜிக்கல் ஃபேண்டஸி என்டர்டெய்னராக உருவாகியுள்ள இப்படத்திற்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹிப் ஹாப் தமிழா இசையமைக்க, படத்தொகுப்பு பணிகளை ஃபென்னி ஆலிவர் மேற்கொண்டுள்ளார். திரைக்கதை மற்றும் வசனத்தை வெங்கட் ராகவன் எழுதியுள்ளார்.
பிரம்மாண்டமான திரையரங்கு அனுபவம்?
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரித்துள்ள இப்படத்திற்கு குஷ்பூ சுந்தர், குஷ்மிதா கணேஷ், இஷான் சக்சேனா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக உள்ளனர்.
தற்போது வெளியாகியுள்ள ‘Rise of Mahasakthi’ டீசரில் இடம்பெற்றுள்ள பிரம்மாண்டமான காட்சிகள், படத்தின் கதை மற்றும் உருவாக்கத்தின் மீதான ஆர்வத்தை தூண்டியுள்ளன. குறிப்பாக நயன்தாராவின் கதாபாத்திரம் மற்றும் மித்தலாஜிக்கல் ஃபேண்டஸி பின்னணி ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.
ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2: மஹாசக்தி’, வரும் நவம்பர் 6-ம் தேதி தீபாவளி வெளியீடாக திரையரங்குகளை சந்திக்கிறது.

