7 வயதில் 12 மொழிகள்! அசின் மகளின் வியக்க வைக்கும் திறமை!
நடிகை அசினின் மகள் அரின், தனது 7 வயதிலேயே சுமார் 12 மொழிகளைப் புரிந்துகொண்டு பேசுவதாக அவரது தந்தையும் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனருமான ராகுல் சர்மா தெரிவித்துள்ளார். இந்தத் தகவல் தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
MyGov India உடனான உரையாடலில் பேசிய ராகுல் சர்மா, தனது மகளுக்கு கொரியன், ஜப்பானிய, தாய் மற்றும் சீன மொழிகள் உள்ளிட்ட பல மொழிகளில் ஆர்வம் இருப்பதாகக் குறிப்பிட்டார். தனக்கே ஆங்கிலம், இந்தி ஆகிய இரண்டு மொழிகளைத் தாண்டிப் பேசுவது சிரமமாக இருப்பதாகவும் அவர் நகைச்சுவையாகத் தெரிவித்தார்.
மேலும், தங்கள் மகளுக்கு இதுவரை மொபைல் போன் வழங்கவில்லை என்றும், வீட்டில் தொலைக்காட்சியும் இல்லை என்றும் அவர் கூறினார். குழந்தையின் நேரத்தைப் புத்தகங்கள் வாசிப்பதற்கும் கற்றலுக்கும் பயன்படுத்தும் வகையில் குடும்பச் சூழலை அமைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
தற்போது இரண்டாம் வகுப்பு படிக்கும் அரினுக்காக, வீட்டில் எட்டாம் மற்றும் ஒன்பதாம் வகுப்புகளுக்கான புத்தகங்களும் இருப்பதாக ராகுல் சர்மா பகிர்ந்துகொண்டார். மகளின் வளர்ப்பு மற்றும் கல்வியில் மனைவி அசினின் பங்களிப்பு முக்கியமானது என்றும் அவர் பாராட்டினார்.
நடிகை அசின், கடந்த 2016ஆம் ஆண்டு ராகுல் சர்மாவைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு திரைத்துறையிலிருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார்.

