“விஜய் வந்த பிறகுதான் அரசியலில் புதிய அலை உருவாகியுள்ளது” – நடிகை ரெஜினா!
கோவை பிராட்வே சினிமாஸில் ரசிகர்களுடன் இணைந்து ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் டிரெய்லரைப் பார்த்த நடிகை ரெஜினா கசாண்ட்ரா, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். நவம்பர் 6ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், நயன்தாராவுடன் நேருக்கு நேர் மோதும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக ரெஜினா கூறினார். தான் ஏற்று நடித்துள்ள பைரவி கதாபாத்திரத்தின் அறிமுகம் வித்தியாசமாக இருக்கும் என்றும், இதற்காகச் சண்டைப் பயிற்சிகள் மேற்கொண்டு கடுமையாக உழைத்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், இப்படத்தை நயன்தாரா தனது தோளில் சுமந்து உருவாக்கியுள்ளதாகப் பாராட்டிய அவர், ஒரு பெண் நடிகை இவ்வளவு பெரிய திரைப்படத்தை முன்னெடுத்திருப்பது தனக்கு ஊக்கமளிப்பதாகக் குறிப்பிட்டார். யோகி பாபு, ஊர்வசி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தில் நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துப் பேசிய ரெஜினா, ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றும், விஜய்யின் வருகைக்குப் பிறகு அரசியலில் புதிய அலை உருவாகியுள்ளதாகவும் கூறினார். அரசியலில் புதிய பாதையை உருவாக்கியவர் விஜய் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தனக்கு அரசியலில் ஆர்வம் ஏற்படும் பட்சத்தில் அதுகுறித்து வெளிப்படையாகத் தெரிவிப்பேன் என்ற ரெஜினா, மேலும் இரண்டு திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். ஹிப் ஹாப் தமிழா ஆதியின் கல்லூரிக் காலத்திலிருந்தே ரசிகை என்றும் அவர் சிரித்துக்கொண்டே பகிர்ந்துகொண்டார்.
