தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் ஏசி வசதியுடன் இலவச டியூஷன் சென்டர்கள்? – தனுஷ் திட்டம்!
நடிகர் தனுஷ் அரசியலில் களமிறங்க உள்ளதாகப் பரவலாகப் பேசப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் பள்ளி மாணவர்களுக்காக ஏசி வசதியுடன் கூடிய இலவச டியூஷன் சென்டர்களைத் தொடங்க அவரது நற்பணி இயக்கம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மையங்கள் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வுகளுக்குத் தயாராக உதவும் வகையில் அமைக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு மையத்திலும் மூன்று ஆசிரியர்கள் மற்றும் ஒரு உதவியாளரை நியமித்து, அவர்களுக்கான ஊதியத்தை நற்பணி இயக்கம் சார்பில் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதற்கட்டமாக மாவட்டத் தலைநகரங்களில் இந்த இலவசப் பயிற்சி மையங்களைத் தொடங்கி, பின்னர் படிப்படியாகத் தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான பணிகள் 2027 ஜனவரிக்குப் பிறகு தொடங்கலாம் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தனுஷின் ரசிகர் மன்றம் நற்பணி இயக்கமாக மாற்றப்பட்டுள்ளதும், அண்மையில் மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றதும் அவரது அரசியல் வருகை குறித்த விவாதங்களை அதிகரித்துள்ளன. இருப்பினும், அரசியல் கட்சி தொடங்குவது குறித்தோ, இந்தக் கல்வித் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்தோ தனுஷ் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
திட்டம் நடைமுறைக்கு வந்தால், தனியார் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்ல முடியாத மாணவர்களுக்கு இது உதவியாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
