பின்லாந்தில் இந்தியாவுக்கு பெருமை! சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் 14 பதக்கங்கள் வென்று முதலிடம் பிடித்த இந்திய அணி!
பின்லாந்தின் டாம்பெரே நகரில் நடைபெற்ற 46வது சர்வதேச டாம்மர் குத்துச்சண்டை போட்டியில் இந்திய அணி மொத்தம் 14 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
இதில் 4 தங்கம், 2 வெள்ளி மற்றும் 8 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும். நவம்பர் 1ஆம் தேதி நிறைவடைந்த இந்தப் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

மகளிர் 54 கிலோ எடைப்பிரிவில் ஆர்த்தி தாரியால், 65 கிலோ எடைப்பிரிவில் அங்குஷிதா போரா, 70 கிலோ எடைப்பிரிவில் அருந்ததி சவுத்ரி ஆகியோர் தங்கப் பதக்கங்களை வென்றனர். ஆடவர் 55 கிலோ எடைப்பிரிவில் பவன் பர்த்வால் மற்றொரு தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.
அதேபோல், ஆடவர் 60 கிலோ எடைப்பிரிவில் முகமது ஹுசாமுதீனும், மகளிர் 57 கிலோ எடைப்பிரிவில் ஜாஸ்மினும் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.

மேலும், விவேக் மீனா, ஹிதேஷ், அக்ஷய், போபின் சவுகான், சேத்தன் சவுத்ரி, தனு, திஷா பாட்டீல் மற்றும் இம்ரோஸ் கான் ஆகிய 8 வீரர், வீராங்கனைகள் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
1977ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் இந்திய அணி முதலிடம் பிடித்திருப்பது சர்வதேச குத்துச்சண்டை அரங்கில் இந்தியாவின் திறமையை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.
