தீபாவளி ஸ்பெஷல்! ரூ.200-க்கு 10 வகையான மளிகைப் பொருட்கள் – தமிழக அரசு அறிவிப்பு!
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தமிழகக் கூட்டுறவுத் துறை சார்பில் 10 வகையான அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பு ரூ.200-க்கு விற்பனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 30ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் உள்ள 128 கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் இந்தத் தொகுப்பு விற்பனை செய்யப்படுகிறது. மாநகராட்சிப் பகுதிகள் அல்லாத இடங்களில் செயல்படும் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலைகள், தொடக்கக் கூட்டுறவுப் பண்டகசாலைகள் மற்றும் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் இதைப் பெற்றுக்கொள்ளலாம்.
மொத்தம் 1.45 கிலோ எடையுள்ள இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள 10 பொருட்களின் விவரங்கள்:
- கடலைப் பருப்பு – 250 கிராம்
- பாசிப்பருப்பு – 250 கிராம்
- மிளகாய் – 100 கிராம்
- தனியா – 150 கிராம்
- பூண்டு – 150 கிராம்
- புளி – 250 கிராம்
- கடுகு – 100 கிராம்
- உடைத்த உளுத்தம் பருப்பு – 100 கிராம்
- சீரகம் – 50 கிராம்
- சோம்பு – 50 கிராம்
இந்தப் பொருட்கள் அனைத்தும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமைப் பையில் ஒரே தொகுப்பாக வழங்கப்படும். தனித்தனியாகப் பொருட்களை வாங்க முடியாது என கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.
செங்குன்றத்தில் உள்ள மருதம் கூட்டுறவு சிறப்பங்காடியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் வ. காந்திராஜ் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார். பண்டிகைக் காலத்தில் அத்தியாவசிய மளிகைப் பொருட்களை குறைந்த விலையில் பொதுமக்கள் பெறும் நோக்கில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
