செய்திகள்

நவம்பர் 1 முதல் சாலைப் பள்ளங்களை 24 மணி நேரத்தில் சீரமைக்க உத்தரவு!

நவம்பர் 1 முதல் சாலைப் பள்ளங்களை 24 மணி நேரத்தில் சீரமைக்க உத்தரவு!

தமிழகத்தில் சாலைகளில் ஏற்படும் பள்ளங்களை விரைவாகச் சீரமைக்கும் வகையில், சாலைப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நவம்பர் 1-ம் தேதி முதல் சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டால் அவற்றை 24 மணி நேரத்திற்குள் சரிசெய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் ஏற்படும் பள்ளங்களால் வாகன ஓட்டிகள் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, மழைக்காலங்களில் சாலைகளில் பள்ளங்கள் அதிகரிப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு விபத்து அபாயம் ஏற்படுகிறது.

இதனைத் தடுக்கும் நோக்கில், சாலைப் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் தங்களுக்கான பொறுப்புகளை முறையாக நிறைவேற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சாலைகளில் பள்ளங்கள் இருப்பது கண்டறியப்பட்டால் அவற்றை 24 மணி நேரத்திற்குள் சீரமைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணிகளை முடிக்கத் தவறும் ஒப்பந்ததாரர்களுக்கு முதலில் நோட்டீஸ் அனுப்பப்படுவதுடன், விதிமீறல்களுக்கு ஏற்ப அபராதமும் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய நடைமுறை மூலம் சாலைகளின் தரத்தைப் பராமரிப்பதுடன், பொதுமக்களின் பயணப் பாதுகாப்பையும் மேம்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.