உக்ரைனில் அணு ஆயுதத் தாக்குதல் எச்சரிக்கை! செயலியில் சைபர் தாக்குதல் – பொதுமக்களிடையே பரபரப்பு!
உக்ரைனில் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை செயலியில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு விமானப்படை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தலைநகர் கீவ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அணு ஆயுதத் தாக்குதல், கதிர்வீச்சு பாதிப்பு மற்றும் ரசாயனத் தாக்குதல் தொடர்பான போலியான எச்சரிக்கை செய்திகள் வெளியானதால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டது.
ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்படும்போது பொதுமக்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல உதவும் வகையில் இந்தச் செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், நவம்பர் 1ஆம் தேதி இரவு செயலியில் அடுத்தடுத்து தவறான எச்சரிக்கை செய்திகள் வந்ததாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, கீவ் நகரில் கதிர்வீச்சு அபாயம் இருப்பதாகவும், ரசாயனத் தாக்குதல் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டன. மேலும், ரஷ்யாவின் ஹைப்பர்சோனிக் ஓரேஷ்னிக் ஏவுகணை பயன்படுத்தப்பட்டதாகவும் தவறான தகவல் பரவியது.
இதையடுத்து, உக்ரைன் விமானப்படை பொதுமக்களுக்கு அவசர அறிவிப்பு வெளியிட்டது. நாட்டில் கதிர்வீச்சு அல்லது அணு ஆயுத அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்றும், செயலியில் வெளியான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டது.
உக்ரைனின் டிஜிட்டல் மாற்றத்துறை அமைச்சகமும் செயலி தற்காலிகமாகச் செயல்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியது. இருப்பினும், சைரன்கள் உள்ளிட்ட பிற எச்சரிக்கை வழிமுறைகள் தொடர்ந்து செயல்பாட்டில் இருந்தன.
இந்த சைபர் தாக்குதலுக்குப் பின்னால் ரஷ்யா இருப்பதாக உக்ரைனின் தகவல் தொடர்பு அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. ஆனால், இதுகுறித்து சுயாதீனமான உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை. இதற்கிடையே ரஷ்யாவின் அவசரநிலை அமைச்சகச் செயலியிலும் தனியாக சைபர் தாக்குதல் நடைபெற்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இரு சம்பவங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை.
