செய்திகள்

2027-ல் இந்தியாவில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு – மத்திய அரசு அறிவிப்பு!

2027-ல் இந்தியாவில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு – மத்திய அரசு அறிவிப்பு!

இந்தியாவில் 2027-ம் ஆண்டுக்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டப் பணிகள் வரும் ஜனவரி 25-ம் தேதி முதல் பிப்ரவரி 28-ம் தேதி வரை நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அட்டவணையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, பொதுமக்கள் தங்களது குடும்ப விவரங்களைத் தாங்களாகவே இணையதளம் வாயிலாகப் பதிவு செய்யும் சுயக் கணக்கெடுப்பு வசதி ஜனவரி 10-ம் தேதி முதல் ஜனவரி 24-ம் தேதி வரை வழங்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து ஜனவரி 25-ம் தேதி முதல் கணக்கெடுப்பாளர்கள் வீடு வீடாகச் சென்று மக்களின் விவரங்களைச் சேகரிப்பார்கள்.

மேலும், கணக்கெடுப்பில் விடுபட்டவர்கள் மற்றும் சேகரிக்கப்பட்ட விவரங்களைச் சரிபார்ப்பதற்காக மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 5-ம் தேதி வரை மறுஆய்வுப் பணிகள் நடைபெற உள்ளன. இந்தக் கணக்கெடுப்புக்கான அடிப்படை நாளாக 2027 மார்ச் 1-ம் தேதி நள்ளிரவு 12 மணி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனினும், தேர்தல் நடைபெற உள்ள கோவா, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களுக்கும், பனிப்பொழிவு அதிகமுள்ள சில பகுதிகளுக்கும் இந்த அட்டவணையில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளுக்கான கணக்கெடுப்பு தனியாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடைசியாக 2011-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைபெற்றது. கொரோனா பெருந்தொற்று காரணமாக 2021-ல் நடைபெற வேண்டிய கணக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது நடைபெறவுள்ள கணக்கெடுப்பில் சாதிவாரியான விவரங்களும் சேகரிக்கப்பட உள்ளன. மேலும், டிஜிட்டல் முறையில் விவரங்களைச் சேகரிப்பது இந்தக் கணக்கெடுப்பின் முக்கிய அம்சமாகும்.