கிராம வளர்ச்சிக்கு ரூ.7,395 கோடி புதிய திட்டம்!
இந்தியாவில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தவும், கிராமங்களின் அடிப்படை நிர்வாகக் கட்டமைப்பை மேம்படுத்தவும் மத்திய அரசு புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, பிரதம மந்திரி விக்சித் கிராம் ஸ்வராஜ் யோஜனா என்ற புதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்தத் திட்டம் 2026-27ஆம் நிதியாண்டு முதல் 2030-31ஆம் நிதியாண்டு வரை ஐந்து ஆண்டுகளுக்குச் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக மொத்தம் ரூ.7,395.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 2.55 லட்சத்திற்கும் அதிகமான கிராம ஊராட்சிகள் மற்றும் பாரம்பரிய உள்ளாட்சி அமைப்புகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற உள்ளன.
கிராம ஊராட்சிகளில் வளர்ச்சித் திட்டங்களை முறையாக உருவாக்குதல், டிஜிட்டல் நிர்வாக முறைகளை அறிமுகப்படுத்துதல், ஊராட்சிப் பணியாளர்களின் திறன்களை மேம்படுத்தப் பயிற்சி வழங்குதல் மற்றும் நிதி மேலாண்மையை வலுப்படுத்துதல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
மேலும், கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள் தங்களுக்கான வளர்ச்சிப் பணிகளைத் திட்டமிட்டு செயல்படுத்தும் வகையில் தேவையான தொழில்நுட்ப மற்றும் நிர்வாக ஆதரவை வழங்கவும் இத்திட்டம் வழிவகுக்கும். இதன் மூலம் கிராமப்புறங்களில் நிர்வாகத் திறன் அதிகரிப்பதுடன், உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
