தேனி சிறைத் தப்பிப்பு சம்பவம் – கைதிகள் துன்புறுத்தப்பட்டார்களா? விசாரணைக்கு உத்தரவு!
தேனி மாவட்டத்தில் உள்ள சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பாக, சிறை அதிகாரிகள் கைதிகளைத் துன்புறுத்தினார்களா என்பது குறித்து விசாரணை நடத்த தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 26ஆம் தேதி இரவு, தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தெக்கம்பட்டி கிளைச் சிறையிலிருந்து 17 விசாரணைக் கைதிகள் தப்பிச் சென்றனர். இதையடுத்து காவல்துறையினர் ட்ரோன்கள் மற்றும் சிறப்புப் படையினரின் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, தப்பியோடிய அனைத்து 17 கைதிகளையும் மீண்டும் கைது செய்தனர்.

இந்நிலையில், சிறைக்குள் கைதிகளுக்கு முறையான உணவு மற்றும் குடிநீர் வழங்கப்படவில்லை என்றும், சிறை அதிகாரிகளால் உடல் மற்றும் மனரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. மேலும், தங்களது குறைகளை அதிகாரிகளிடம் தெரிவிக்க கைதிகள் அனுமதிக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவினர் சிறைக்குச் சென்று விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
மேலும், தற்போது கைதிகள் அடைக்கப்பட்டுள்ள கடலூர், மதுரை, சேலம் மற்றும் திருநெல்வேலி மத்திய சிறைகளுக்கும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவர்கள் நேரில் சென்று, சிறை அதிகாரிகள் முன்னிலையில் இல்லாமல் ஒவ்வொரு கைதியிடமும் தனித்தனியாக விசாரணை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விசாரணையின் அறிக்கைகளை நவம்பர் 16ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறையில் கைதிகளின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என்பது குறித்து விரிவான விசாரணை நடைபெற உள்ளது.
