செய்திகள்

இன்றும் தொடர்கிறதா டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்?

இன்றும் தொடர்கிறதா டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்?

தமிழகம் முழுவதும் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் நடைமுறை மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை விதிகளுக்கு எதிராக டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நவம்பர் 1ஆம் தேதி (நேற்று) தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஊழியர்கள் கடைகளைத் திறக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாநிலம் முழுவதும் 4,040 கடைகளில் சுமார் 460 கடைகள் மூடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி மதுபாட்டில்களை வாடிக்கையாளர்கள் திரும்ப ஒப்படைக்கும்போது, அதற்கான ரூ.10 தொகையைத் திரும்ப வழங்க வேண்டும். இதற்காக பாட்டில்களின் QR குறியீட்டை ஸ்கேன் செய்து சரிபார்க்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதாகவும், போதிய பணியாளர்கள், ஸ்கேனிங் கருவிகள் மற்றும் பாட்டில்களைச் சேமிப்பதற்கான இடவசதி இல்லை என்றும் ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், ரூ.1,000-க்கு மேல் ஒரே முறையில் மது வாங்கும்போது UPI அல்லது கார்டு மூலம் பணம் செலுத்த வேண்டும் என்ற புதிய கட்டுப்பாட்டுக்கும் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சுமார் 10 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. போராட்டம் தொடர்ந்தால் தற்காலிக ஊழியர்களை நியமித்து கடைகளைத் திறக்க டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இன்றும் போராட்டம் தொடருமா, கடைகள் வழக்கம்போல் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மதுப்பிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. நவம்பர் 2ஆம் தேதி அனைத்து கடைகளிலும் போராட்டம் தொடர்வது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.