போராட்டம் நடத்த ஒதுக்கப்பட்ட இடங்களை காலவரையின்றி ஆக்கிரமிக்க முடியாது – உச்சநீதிமன்றம்!
டெல்லியில் போராட்டம் நடத்துவதற்காக ஒதுக்கப்பட்ட பொது இடங்களை எந்தவொரு தனிநபரோ, அமைப்போ அல்லது அரசியல் கட்சியோ காலவரையின்றி ஆக்கிரமிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள் தொடர்பான வழக்குகளை விசாரித்தபோது இந்தக் கருத்தைத் தெரிவித்தது.
அப்போது, ஒரு குறிப்பிட்ட குழுவினர் தொடர்ந்து ஒரே இடத்தில் போராட்டம் நடத்தினால், விவசாயிகள், தொழிலாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பிற அமைப்புகள் எங்கு போராட்டம் நடத்துவார்கள் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அனைவருக்கும் போராட்டம் நடத்த உரிமை உள்ளது என்றும், அதற்காக ஒதுக்கப்படும் இடங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
மேலும், போராட்டம் நடத்துவதற்கான உரிமையுடன் வணிகம் செய்வதற்கான உரிமையும், அன்றாடம் உழைத்து வருமானம் ஈட்டும் மக்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
டெல்லியில் போராட்டங்களால் வணிகர்கள் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளதாகக் கூறி, பண்டிகைக் காலத்தில் போராட்டங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என வணிகர் சங்கங்கள் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதுதொடர்பாக போராட்டங்களை ஏற்பாடு செய்த அமைப்புகளையும் வழக்கில் சேர்க்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், போராட்ட உரிமையையும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும் சமநிலைப்படுத்தும் வகையில் போராட்டங்களுக்கான இடங்களும் காலவரம்புகளும் நிர்ணயிக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
