செய்திகள்

டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு – GRAP-2 கட்டுப்பாடுகள் அமல்!

டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு – GRAP-2 கட்டுப்பாடுகள் அமல்!

டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (Delhi-NCR) காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நவம்பர் 2ஆம் தேதி டெல்லியின் காற்றுத் தரக் குறியீடு (AQI) 324 ஆக உயர்ந்ததால், காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. இதையடுத்து, காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில் காற்றுத் தர மேலாண்மை ஆணையம் (CAQM) GRAP-2 கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, தனியார் வாகனப் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் பார்க்கிங் கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளன. மேலும், டெல்லி மற்றும் குருகிராம், ஃபரிதாபாத், காசியாபாத் உள்ளிட்ட பகுதிகளில் அரசு அலுவலகங்களின் வேலை நேரங்களை மாற்றியமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் மெட்ரோ ரயில்கள் மற்றும் மின்சாரப் பேருந்துகளின் சேவைகள் அதிகரிக்கப்பட உள்ளன. ஏற்கனவே நவம்பர் 1 முதல் டெல்லிக்குள் BS-VI தரத்திற்குக் குறைவான வெளிமாநில பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்குப் பல்வேறு நுழைவுக் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இந்தக் கட்டுப்பாடுகள் ஜனவரி 31, 2027 வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சாலைகளில் தூசி பரவுவதைக் கட்டுப்படுத்த இயந்திரங்கள் மூலம் சுத்தம் செய்தல், தண்ணீர் தெளித்தல் மற்றும் கட்டுமானப் பணிகளைத் தீவிரமாகக் கண்காணித்தல் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. பொதுமக்கள் தனியார் வாகனங்களைத் தவிர்த்து பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.