செய்திகள்

பெண்களுக்கு ரூ.2,500 எப்போது கிடைக்கும்? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய விளக்கம்!

பெண்களுக்கு ரூ.2,500 எப்போது கிடைக்கும்? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய விளக்கம்!

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகையை மாதம் ரூ.1,000-லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்துவது எப்போது என்ற எதிர்பார்ப்பு பெண்களிடையே அதிகரித்துள்ளது. இந்நிலையில், விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெகதீஸ்வரி, ரூ.2,500 வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், மகளிருக்கு ரூ.2,500 வழங்கப்படும் என்ற வாக்குறுதியை முதலமைச்சர் விஜய் நிச்சயம் நிறைவேற்றுவார் என்றும், அதற்கான நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், தகுதியான பயனாளிகளை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். உயிரிழந்த பயனாளிகளின் பெயர்களைப் பட்டியலிலிருந்து நீக்குவது, தகுதியுள்ள பெண்களுக்கு உதவித்தொகை கிடைப்பதை உறுதி செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதேபோல், சிலருக்குச் சேர வேண்டிய தொகை வேறு நபர்களின் வங்கிக் கணக்குகளுக்குச் சென்றுவிடுவதாகப் புகார்கள் வந்துள்ளன. அவற்றைச் சரிசெய்யும் பணிகளும் நடைபெற்று வருவதாக அமைச்சர் கூறினார்.

அனைத்துத் தகுதிகளையும் சரிபார்த்து, உதவித்தொகை உண்மையான பயனாளிகளுக்குச் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதாகவும் அவர் விளக்கமளித்தார்.

இருப்பினும், ரூ.2,500 உதவித்தொகை எந்தத் தேதியில் இருந்து வழங்கப்படும் என்பது குறித்து அமைச்சர் குறிப்பிட்ட தேதியை அறிவிக்கவில்லை. தேவையான பணிகள் நிறைவடைந்த பிறகே இதுகுறித்து உறுதியாகத் தெரிவிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

எனவே, பெண்களுக்கு ரூ.2,500 உதவித்தொகை விரைவில் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்திருந்தாலும், பணம் வரவு வைக்கப்படும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காகப் பயனாளிகள் காத்திருக்க வேண்டியுள்ளது.