செய்திகள்

போலி வழக்குப் பதிவு செய்ததாக புகார் – 2 காவல் ஆய்வாளர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை!

போலி வழக்குப் பதிவு செய்ததாக புகார் – 2 காவல் ஆய்வாளர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை!

சென்னையில் நில அபகரிப்பு புகாரைத் திரும்பப் பெறுமாறு புகார்தாரரை மிரட்டியதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, விருகம்பாக்கம் காவல் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு காவல் ஆய்வாளர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வடபழனி குமரன் காலனியில் உள்ள 1,800 சதுர அடி நிலத்திற்கு போலி ஆவணங்கள் தயாரித்து அபகரிக்க முயன்றதாக சூர்யா என்பவர் புகார் அளித்திருந்தார். இதன் அடிப்படையில் பழந்துரை உள்ளிட்ட மூவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி குற்றம் சாட்டப்பட்டவர்கள் உயர் நீதிமன்றத்தை அணுகினர். அப்போது புகார் தொடர்பாக விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையில், புகாரைத் திரும்பப் பெறுமாறு சூர்யாவை காவல் ஆய்வாளர்கள் மிரட்டியதாகவும், அவர் மறுத்ததால் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது போலி வழக்குப் பதிவு செய்து கைது செய்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, காவல் ஆய்வாளர்கள் முனிசேகர் மற்றும் ராஜேஷ் மீது துறைரீதியான விசாரணை நடத்த சென்னை காவல் ஆணையருக்கு நீதிபதி என். ரமேஷ் உத்தரவிட்டார். மேலும், இணை ஆணையர் அந்தஸ்திலான அதிகாரி விசாரணை நடத்தி, டிசம்பர் 4ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.