செய்திகள்

‘ஓம்’ பட இசை வெளியீட்டு விழா சர்ச்சை… ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட தனுஷ்!

'ஓம்' பட இசை வெளியீட்டு விழா சர்ச்சை... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட தனுஷ்!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘ஓம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நுழைவுச்சீட்டுகளைப் பெற்றிருந்தனர். ஆனால், நுழைவுச்சீட்டு இருந்தும் பல ரசிகர்களால் விழாவிற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் பலர் விழாவில் பங்கேற்க முடியாமல் திரும்பிச் சென்றனர்.

இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளான நிலையில், நடிகர் தனுஷ் ரசிகர்களிடம் தனது வருத்தத்தையும் மன்னிப்பையும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கைகளில் நுழைவுச்சீட்டு வைத்திருந்தும் உள்ளே வர முடியாமல் திரும்பிச் சென்றது என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “யாருடைய தவறு என்று நான் ஆராய விரும்பவில்லை. நானே இதற்குப் பொறுப்பேற்று என் வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வது என் பொறுப்பு” என்றும் தெரிவித்துள்ளார்.

ரசிகர்களுக்கு ஏற்பட்ட இந்தச் சிரமத்திற்குத் தனுஷ் நேரடியாகப் பொறுப்பேற்று மன்னிப்புக் கேட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது. இதற்கிடையே, அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படாமல் உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.