ஆசிய விளையாட்டுக்கு முன் இந்தியாவுக்கு அதிர்ச்சி! நீரஜ் சோப்ரா திடீர் விலகல்!

ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு முன்பாக இந்திய தடகள அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக 2026-ம் ஆண்டின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதன் காரணமாக, ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் நீரஜ் சோப்ரா பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற நீரஜ், ஆசிய விளையாட்டிலும் பதக்க நம்பிக்கையாக பார்க்கப்பட்ட நிலையில், அவரது விலகல் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக காயங்களால் அவதிப்பட்டு வந்த நீரஜ், இந்த சீசனில் மீண்டும் தனது பழைய ஃபார்மை நோக்கி திரும்பி வந்தார். தோஹா டைமண்ட் லீக்கில் 85.69 மீட்டர் தூரம் எறிந்து 4-வது இடம் பிடித்த அவர், கிளாஸ்கோ போட்டியில் 85.83 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இதனைத் தொடர்ந்து லாசானில் நடைபெற்ற டைமண்ட் லீக் போட்டியில் 88.05 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து, 2026 சீசனில் தனது சிறந்த செயல்பாட்டை பதிவு செய்தார். இதனால் ஆசிய விளையாட்டில் நீரஜ் மீண்டும் தங்கப் பதக்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.

ஆனால் லாசான் போட்டிக்குப் பிறகு பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அவரது கணுக்காலில் லிகமென்ட் கிழிவு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவர்கள் மற்றும் தனது அணியினருடன் ஆலோசித்த நீரஜ், முழுமையாக குணமடைவதற்காக இந்த சீசனின் மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.

நீரஜ் இல்லாத நிலையில், ஆசிய விளையாட்டில் இந்தியாவின் ஈட்டி எறிதல் பிரிவில் ரோஹித் யாதவ் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் புவனேஸ்வரில் நடைபெற்ற போட்டியில் 87.68 மீட்டர் தூரம் எறிந்து ரோஹித் யாதவ் தனது தனிப்பட்ட சிறந்த சாதனையை பதிவு செய்திருந்தார்.

அதே நேரத்தில், இலங்கை வீரர் ருமேஷ் பதிரகேவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கிளாஸ்கோ போட்டியில் 89.75 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்ற அவர், நீரஜை பின்னுக்குத் தள்ளினார்.

ஆசிய விளையாட்டில் நீரஜ் சோப்ரா – ருமேஷ் பதிரகே இடையேயான போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில், தற்போது நீரஜின் காயம் அந்த எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *