செய்திகள்

8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ‘ராம் – ஜானு’!

8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் 'ராம் - ஜானு'!

இயக்குநர் சி. பிரேம்குமார் கதை, திரைக்கதை எழுதி இயக்கத்தில், விஜய் சேதுபதி மற்றும் திரிஷா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து 2018-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘96’ திரைப்படம், எட்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இன்று (அக்டோபர் 9, 2026) மீண்டும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக மறுவெளியீடு செய்யப்படுகிறது.

பள்ளிப் பருவத்தில் மலரும் காதல், வாழ்க்கையின் வெவ்வேறு பாதைகளில் பயணித்த பிறகு பள்ளி நண்பர்களின் சந்திப்பில் (Reunion) மீண்டும் நேருக்கு நேர் சந்திக்கும் ராம் – ஜானு, அந்த ஒரே இரவில் அவர்களுக்குள் எழும் பழைய நினைவுகள், சொல்ல முடியாத வார்த்தைகள், காதலை வெளிப்படுத்துவதில் இருக்கும் தயக்கம் மற்றும் காலம் கடந்தும் மாறாத அன்பின் ஆழம் ஆகியவற்றை மிக இயல்பான காட்சிகளாலும் உணர்வுபூர்வமான வசனங்களாலும் படமாக்கிய விதம் தமிழ் சினிமாவின் சிறந்த காதல் காவியங்களில் ஒன்றாக இப்படத்தை மாற்றியது.

ஆதித்யா பாஸ்கர், கௌரி ஜி. கிஷன், தேவதர்ஷினி, பகவதி பெருமாள், ஆடுகளம் முருகதாஸ், வர்ஷா பொல்லம்மா உள்ளிட்டோரின் இயல்பான நடிப்பும், மகேந்திரன் ஜெயராஜு மற்றும் என். சண்முகசுந்தரத்தின் கவித்துவமான ஒளிப்பதிவும், ஆர். கோவிந்தராஜின் சுவாரஸ்யமான படத்தொகுப்பும் படத்திற்குப் பலம் சேர்த்தன. குறிப்பாக, கோவிந்த் வசந்தாவின் இசையில் உருவான ‘காதலே காதலே’, ‘தி லைஃப் ஆஃப் ராம்’, ‘அந்தாதி’ போன்ற பாடல்களும், காட்சிகளோடு ஒன்றிய பின்னணி இசையும் படத்தின் வெற்றிக்கு முக்கியத் தூணாக அமைந்தன.

Madras Enterprises சார்பில் எஸ். நந்தகோபால் தயாரித்த இத்திரைப்படத்தை, ஏற்கெனவே திரையரங்கில் பார்த்த ரசிகர்களுக்கு ராம் – ஜானுவின் நினைவுகளை மீண்டும் அனுபவிக்கும் வாய்ப்பாகவும், தொலைக்காட்சியிலும் இணையத்திலும் மட்டுமே பார்த்த புதிய தலைமுறை ரசிகர்களுக்குப் பெரிய திரையில் அந்த உணர்வுகளைக் கண்டு ரசிக்கும் அரிய வாய்ப்பாகவும் இந்த மறுவெளியீடு அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *