சென்னை மெட்ரோவில் புதிய வழித்தடம் தொடக்கம்! பூந்தமல்லி – வடபழனி சேவையைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, முதல்வர் விஜய்
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், பூந்தமல்லி – வடபழனி இடையேயான புதிய மெட்ரோ ரயில் சேவையைப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் விஜய் ஆகியோர் இன்று (அக். 11) கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.
சென்னையில் ஏற்கெனவே நீல வழித்தடம், பச்சை வழித்தடம் ஆகிய இரண்டு மெட்ரோ வழித்தடங்கள் பயன்பாட்டில் உள்ளன. நீல வழித்தடம் விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரையிலும், பச்சை வழித்தடம் சென்னை சென்ட்ரல் முதல் செயின்ட் தாமஸ் மவுண்ட் வரையிலும் இயக்கப்படுகிறது. இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, ரூ.4,900 கோடி செலவில் பூந்தமல்லி – வடபழனி இடையே 14.64 கி.மீ. நீளத்தில் புதிய மெட்ரோ வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்திற்கான பணிகள் நிறைவடைந்து, பாதுகாப்பு ஒப்புதலும் பெறப்பட்டிருந்த நிலையில், பொதுமக்களின் பயன்பாட்டிற்கான தொடக்க விழா நடைபெறாமல் இருந்தது.
இதற்கிடையே, இன்று தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை, சென்னை விமான நிலையத்தில் முதல்வர் விஜய் வரவேற்றார். பின்னர், இருவரும் போரூர் சென்றடைந்து, பூந்தமல்லி – வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் சேவையைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து, பிரதமர் மோடியும் முதல்வர் விஜயும் மெட்ரோ ரயிலில் இணைந்து பயணம் செய்தனர்.
இந்தப் புதிய வழித்தடத்தின் மூலம் சென்னையின் மேற்கு மற்றும் தென்மேற்குப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் நகரின் பிற பகுதிகளுக்குச் செல்வது எளிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சாலைப் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதிலும் இந்த மெட்ரோ சேவை முக்கியப் பங்கு வகிக்கும் எனக் கருதப்படுகிறது.
பொதுமக்கள் பயன்பாட்டிற்கு எப்போது?
பூந்தமல்லி – வடபழனி இடையேயான புதிய மெட்ரோ ரயில் சேவை இன்று மாலை 4 மணி முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அடுத்தடுத்த நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ரயில் சேவை இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
