செய்திகள்

ஏஐ வளர்ச்சியால் ஐடி துறையில் மாற்றம்: மைக்ரோசாப்ட் முக்கிய அறிவிப்பு!

ஏஐ வளர்ச்சியால் ஐடி துறையில் மாற்றம்: மைக்ரோசாப்ட் முக்கிய அறிவிப்பு!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் முதலீடுகளை அதிகரித்து, செலவுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மைக்ரோசாப்ட் நிறுவனம் சுமார் 60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்துள்ளது.

இந்தத் திட்டம் இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடா ஆகிய நாடுகளில் உள்ள தகுதியான ஊழியர்களுக்குப் பொருந்தும். நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் சுமார் 27 சதவீதம் பேர் இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இருப்பினும், 60,000 பேரும் நிறுவனத்தை விட்டு வெளியேறுவார்கள் என்று அர்த்தமில்லை.

இந்தத் திட்டத்தின் கீழ் விருப்ப ஓய்வைத் தேர்வு செய்யும் ஊழியர்களுக்கு, அவர்களின் பணி நிலை மற்றும் பணிக்காலத்திற்கு ஏற்ப இழப்பீடு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள ஊழியர்கள் டிசம்பர் முதல் வாரத்திற்குள் தங்களது முடிவைத் தெரிவிக்க வேண்டும் என்றும், திட்டத்தை ஏற்றுக்கொள்பவர்கள் டிசம்பர் 31ஆம் தேதியுடன் நிறுவனத்திலிருந்து வெளியேறுவார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மைக்ரோசாப்ட் நிறுவனம் 2026 ஜூன் மாத நிலவரப்படி உலகளவில் 2,23,000 முழுநேர ஊழியர்களைக் கொண்டிருந்தது. ஏற்கெனவே இந்த ஆண்டு பணியாளர் எண்ணிக்கையைக் குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விருப்ப வெளியேற்றத் திட்டம் தொழில்நுட்பத் துறையில் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஏஐ தொழில்நுட்பத்திற்கான உள்கட்டமைப்பு மற்றும் தரவு மையங்களில் பெரிய அளவில் முதலீடு செய்து வரும் நிலையில், நிறுவனத்தின் செலவுகளைக் கட்டுப்படுத்தவும் எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப பணியாளர் அமைப்பை மாற்றவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.