தண்ணீரில் 40.74 கி.மீ பைக் ஓட்டி கின்னஸ் சாதனை படைத்த சீன இளைஞர்!
சீனாவில் மாற்றியமைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளை தண்ணீரில் 40.74 கிலோமீட்டர் தூரம் ஓட்டி ஜாங் சூ (Zhang Xue) புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள மாயாங் பகுதியில், அக்டோபர் 25ஆம் தேதி இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது. Zhang Xue Motorcycle நிறுவனத்தின் நிறுவனர் ஜாங் சூ, தண்ணீரில் பயணிக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட MX450 பைக்கை ஓட்டி, திறந்த நீர்ப்பரப்பில் மாற்றியமைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளை அதிக தூரம் இயக்கியதற்கான உலக சாதனையைப் படைத்தார்.
இந்த முயற்சியில், பைக்கின் மிதக்கும் திறனை அதிகரிக்கும் வகையில் சிறப்பு அமைப்புகள் பொருத்தப்பட்டதுடன், முக்கிய பாகங்களுக்குத் தண்ணீர் புகாத வகையில் மாற்றங்களும் செய்யப்பட்டன. பைக்கின் பின்புற டயர்கள் தண்ணீரைப் பின்னோக்கித் தள்ளி முன்னேற உதவின. இதன் மூலம், ஆற்றின் நீர்ப்பரப்பில் தொடர்ந்து பயணித்து இலக்கை அடைந்தார்.
இதற்கு முன்பு 31.8 கிலோமீட்டர் தூரம் என்ற சாதனையே இருந்தது. அதனை முறியடித்து 40.74 கிலோமீட்டர் தூரம் பயணித்து ஜாங் சூ சாதனை படைத்துள்ளார். இந்த முயற்சியைச் சரிபார்க்க கின்னஸ் அதிகாரிகள் GPS பதிவுகள் மற்றும் காணொளி ஆதாரங்களை ஆய்வு செய்தனர்.
கடந்த 2009ஆம் ஆண்டு இதேபோன்ற முயற்சியில் தோல்வியடைந்த அவர், 17 ஆண்டுகளுக்குப் பிறகு தனது நீண்டகால கனவை நிறைவேற்றியுள்ளார். இந்தச் சாதனை மோட்டார் சைக்கிள் தொழில்நுட்பத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
