உத்தராகண்டில் ஹெலிகாப்டர் விபத்து – 6 பேர் உ*ரிழந்திருக்கலாம் என அச்சம்!
உத்தராகண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் உள்ள ஜோஷிமத் அருகே ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. பத்ரிநாத் கோயிலில் இருந்து டேராடூனுக்கு 5 பயணிகள் மற்றும் ஒரு விமானி என மொத்தம் 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர், மோசமான வானிலை காரணமாக மலைப்பகுதியில் விபத்தில் சிக்கியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரான்ஸ் பாரத் ஏவியேஷன் நிறுவனத்துக்குச் சொந்தமான VT-HCX ஹெலிகாப்டர், வெள்ளிக்கிழமை மதியம் 1.14 மணியளவில் பத்ரிநாத்தில் இருந்து புறப்பட்டது. ஜோஷிமத் பள்ளத்தாக்குப் பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, மாவட்ட நிர்வாகம், காவல்துறை, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் ராணுவத்தினர் தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
சாய் கிராமம் அருகே ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் விமானி உட்பட 6 பேரும் உ*ரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இருப்பினும், உ*ரிழப்புகள் குறித்த இறுதி உறுதிப்படுத்தல் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
மோசமான வானிலை, மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக மீட்புப் பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விபத்தில் சிக்கிய நிறுவனத்தின் அனைத்து ஹெலிகாப்டர்களின் சேவையையும் உத்தராகண்ட் சிவில் விமானப் போக்குவரத்து மேம்பாட்டு ஆணையம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
