பூடானில் பனிப்பாறை ஏரி உடைந்து வெள்ள அபாயம் – அசாம், மேற்கு வங்கத்திற்கு எச்சரிக்கை!
பூடான் நாட்டில் உள்ள ஷிண்டாபு (Shintaphu) பனிப்பாறை ஏரி உடைந்து அதிகளவிலான தண்ணீர் வெளியேறியுள்ளதால், இந்தியாவின் அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பூடானின் காசா மாவட்டத்தில் உள்ள இந்த ஏரியில் ஏற்பட்ட உடைப்பால் சுமார் 74 லட்சம் கன மீட்டர் தண்ணீர் வெளியேறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நீர் மோ சூ (Mo Chhu) ஆறு வழியாக சங்கோஷ் ஆற்றை நோக்கிப் பாய்கிறது. இதனால் ஆற்றின் நீர்மட்டம் திடீரென உயரக்கூடும் என அச்சம் ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தின் அலிபுர்துவார், கூச் பெஹார் உள்ளிட்ட பகுதிகளிலும், அசாமின் துப்ரி மாவட்டத்திலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேற்கு வங்கத்தின் அலிபுர்துவார் மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். ஆற்றின் நீர்மட்டத்தையும் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதற்கிடையே, பூடானில் உள்ள காசா ட்ஷாச்சு இயற்கை வெந்நீர் ஊற்று பகுதியிலும் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக அப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டதால் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
