செய்திகள்

அமெரிக்காவில் பயங்கர விமான விபத்து! குடியிருப்புப் பகுதியில் விழுந்த தனியார் விமானம் – 9 பேர் உ*ரிழப்பு!

அமெரிக்காவில் பயங்கர விமான விபத்து! குடியிருப்புப் பகுதியில் விழுந்த தனியார் விமானம் – 9 பேர் உ*ரிழப்பு!

அமெரிக்காவின் தெற்கு புளோரிடா மாகாணத்தில் நிகழ்ந்த தனியார் விமான விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 9 பேரும் உ*ரிழந்துள்ளனர். நவம்பர் 1ஆம் தேதி உள்ளூர் நேரப்படி மதியம் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. லியர்ஜெட் 60 (Learjet 60) ரகத்தைச் சேர்ந்த தனியார் விமானம் குடியிருப்புப் பகுதியில் விழுந்து தீப்பற்றி எரிந்தது.

டெக்சாஸ் மாகாணத்தின் ஆஸ்டின் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம், பஹாமாஸ் தீவுகளுக்குச் சென்று கொண்டிருந்தது. பாம் பீச் கவுண்டி பகுதியில் உள்ள கிரீனேக்கர்ஸ் குடியிருப்புப் பகுதியில் மதியம் சுமார் 12.50 மணியளவில் விமானம் திடீரெனக் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. தரையில் மோதியதும் விமானம் தீப்பற்றி எரிந்ததுடன், சாலையில் பெரிய பள்ளமும் ஏற்பட்டது.

விபத்து நிகழ்ந்த பகுதியில் குடியிருப்புகள் மற்றும் சாலை அருகில் இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தில் இருந்த 9 பேரும் உயிரிழந்ததை அமெரிக்க போக்குவரத்துத் துறை அமைச்சர் சீன் டஃபி உறுதிப்படுத்தியுள்ளார். தரையில் இருந்த பொதுமக்கள் உயிரிழந்ததாக உடனடியாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

விபத்துக்கான காரணம் குறித்து அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) விசாரணையைத் தொடங்கியுள்ளது. விமானப் போக்குவரத்து நிர்வாகமான FAA அதிகாரிகளும் விசாரணைக்கு உதவி வருகின்றனர். விபத்துக்கு முன்பாக விமானி பனிப்படலம் மற்றும் மிதமான காற்றுக் கொந்தளிப்பு குறித்து விமானக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

விமானம் விபத்துக்குள்ளானதற்கான துல்லியமான காரணம் விசாரணைக்குப் பின்னரே தெரியவரும்.