செய்திகள்

விமர்சனங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதிலடி – “அனைவரையும் திருப்திப்படுத்த முடியாது!”

விமர்சனங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதிலடி – “அனைவரையும் திருப்திப்படுத்த முடியாது!”

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராமாயணா: ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்’ திரைப்படத்திற்கு இசையமைத்து வரும் ஏ.ஆர்.ரஹ்மான், தனது இசை குறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார்.

இப்படத்தின் ‘மங்கள் ரங்’ பாடல் வெளியானதைத் தொடர்ந்து, அதன் இசை அமைப்பு மற்றும் கவ்வாலி இசையின் தாக்கம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் வெளியாகின. சிலர் பாடலின் இசைத் தேர்வை விமர்சித்த நிலையில், மற்றொரு தரப்பினர் அதற்கு ஆதரவும் தெரிவித்தனர்.

இதுகுறித்து பேசிய ரஹ்மான், ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் கூறிய கருத்தை மேற்கோள் காட்டினார். அதாவது, அனைவரையும் திருப்திப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் ஐஸ்கிரீம் விற்பனை செய்யலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், ஒரு பாடலை உருவாக்குவதற்கு பல மாதங்கள் செலவிடப்படுவதாகவும், அதன் பின்னணியில் ஒரு சிந்தனை செயல்முறை இருப்பதாகவும் ரஹ்மான் விளக்கினார். சில இசை அமைப்புகளை உடனடியாக மதிப்பிடாமல், அவற்றைப் புரிந்துகொள்ளக் கால அவகாசம் தேவை என்றும் தெரிவித்தார்.

ஊறுகாய் காலப்போக்கில் சுவை பெறுவது போல, சில இசை அமைப்புகளும் காலம் செல்லச் செல்ல ரசிகர்களுக்குப் பிடிக்கலாம் என்ற கருத்தையும் அவர் முன்வைத்தார்.

‘ராமாயணா’ படத்தின் இசை குறித்து தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், ரஹ்மானின் இந்தப் பதில் தற்போது கவனம் பெற்றுள்ளது.