செய்திகள்

தருமபுரியில் ரூ.19.20 கோடியில் நவீன பட்டுக்கூடு அங்காடி – முதல்வர் விஜய் திறந்து வைத்தார்!

தருமபுரியில் ரூ.19.20 கோடியில் நவீன பட்டுக்கூடு அங்காடி – முதல்வர் விஜய் திறந்து வைத்தார்!

தருமபுரி மாவட்டம் சோகத்தூரில் ரூ.19.20 கோடி செலவில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அரசு பட்டுக்கூடு அங்காடி வளாகத்தை தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் திறந்து வைத்தார். தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக இந்த வளாகத்தை அவர் திறந்து வைத்தார்.

சுமார் 80 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த வளாகம், பட்டுக்கூடு உற்பத்தி செய்யும் விவசாயிகளின் விற்பனை மற்றும் கொள்முதல் நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.

தருமபுரி அரசு பட்டுக்கூடு அங்காடி கடந்த 40 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்டுதோறும் சுமார் 600 மெட்ரிக் டன் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்படுகின்றன. தருமபுரி மட்டுமின்றி 15 முதல் 20 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளும் இந்த அங்காடியைப் பயன்படுத்தி வருகின்றனர்.

புதிய வளாகத்தில் பட்டுக்கூடு விற்பனைக்கான தனிக் கட்டடம், விவசாயிகள் மற்றும் பட்டு நூற்பாளர்களுக்கான தனித்தனி காத்திருப்புக் கூடங்கள், உணவகம், வாகன நிறுத்துமிடம், குடிநீர் வசதி மற்றும் பட்டு வளர்ப்புக்குத் தேவையான இடுபொருட்கள் விற்பனை மையம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், அலுவலர் குடியிருப்புகள், தொழில்நுட்ப சேவை மையம், விவசாயிகள் பயிற்சி மையம் உள்ளிட்ட 9 கட்டடங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. 1,110 மீட்டர் நீளத்திற்கு சுற்றுச்சுவரும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அங்காடியில் மின்னணு ஏலமுறை அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம் பட்டுக்கூடு விற்பனை வெளிப்படையாகவும் சீராகவும் நடைபெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.