செய்திகள்

நொய்டாவில் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.35 கோடி மாயம்! 30 வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

நொய்டாவில் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.35 கோடி மாயம்! 30 வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில், வாடிக்கையாளர்களின் சேமிப்புக் கணக்குகள் மற்றும் நிலையான வைப்புத் தொகைகளில் இருந்து சுமார் ரூ.35 கோடி மாயமானதாகப் புகார் எழுந்துள்ளது.

ஜேவர் சர்வதேச விமான நிலையத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையும் இதில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வாடிக்கையாளர்கள் தங்களது கணக்குகளைச் சரிபார்த்தபோது, பல லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடிக்கும் அதிகமான தொகை வரை காணாமல் போனது தெரியவந்ததாகப் புகார் தெரிவித்துள்ளனர்.

சில வாடிக்கையாளர்கள் தங்களது அனுமதியின்றி பணம் வேறு கணக்குகளுக்கு மாற்றப்பட்டதாகவும், இதுகுறித்து வங்கியிடமிருந்து குறுஞ்செய்தி எச்சரிக்கைகள் எதுவும் வரவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையிடம் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, வங்கிக் கிளை மேலாளர் உட்பட ஐந்து ஊழியர்களை வங்கி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட கிளையில் விசாரணை நடைபெற்று வருகிறது. பீட்டா-2 காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பணம் எவ்வாறு மாற்றப்பட்டது என்பது குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் புகார்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வங்கி நிர்வாகம் உறுதியளித்துள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.