செய்திகள்

ரூ.400 கோடி மோசடி வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ முத்துக்குமார் சரண்!

ரூ.400 கோடி மோசடி வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ முத்துக்குமார் சரண்!

தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி மற்றும் நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.400 கோடி வரை பணம் வசூலித்ததாக எழுந்த புகாரில், தலைமறைவாக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ முத்துக்குமார் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

விருத்தாசலம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வான வி. முத்துக்குமார், கடந்த 2011 முதல் 2016 வரை தேமுதிக சார்பில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் கட்சி நிதி என்ற பெயரில் பணம் வசூலித்து, பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளி தரம் உயர்த்துவதற்கான அனுமதி உள்ளிட்ட அரசு ஒப்புதல்களைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்ததாகப் புகார் அளிக்கப்பட்டது.

இந்த வழக்கில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அன்பில் மகேஸ் கடந்த அக்டோபர் 26ஆம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையில், முத்துக்குமார் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் அக்டோபர் 28ஆம் தேதி தள்ளுபடி செய்தது. இதையடுத்து அக்டோபர் 29ஆம் தேதி சென்னை ஊழல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் அவர் சரணடைந்தார்.

அவரை நவம்பர் 12ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும், சிறையில் முதல் வகுப்பு வசதி மற்றும் தேவையான மருத்துவ சிகிச்சை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.