16 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக்கோப்பை ஃபைனலில் ஸ்பெயின்!
2026 FIFA கால்பந்து உலகக்கோப்பை அரையிறுதியில், பிரான்ஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின் அணி, 16 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. தொடக்கம் முதல் இறுதி வரை ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின், சிறப்பான தாக்குதல் மற்றும் உறுதியான தற்காப்பு ஆட்டத்தின் மூலம் பிரான்ஸுக்கு எந்த வாய்ப்பையும் வழங்காமல் அபார வெற்றி பெற்றது.
எம்பாப்பே தலைமையிலான பிரான்ஸ் அணியும், இளம் நட்சத்திரம் லமின் யமால் தலைமையிலான ஸ்பெயின் அணியும் மோதிய இந்த அரையிறுதி போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், மிட்ஃபீல்டில் முழு கட்டுப்பாட்டை செலுத்திய ஸ்பெயின் வீரர்கள், பிரான்ஸ் அணியின் தாக்குதல்களை ஆரம்பத்திலேயே முடக்கியதால் போட்டி முழுவதும் ஸ்பெயின் ஆதிக்கத்திலேயே சென்றது.
போட்டியின் 22-வது நிமிடத்தில் ஸ்பெயினுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை மிக்கேல் ஓயர்சபால் துல்லியமாக கோலாக மாற்றினார். இதன் மூலம் முன்னிலை பெற்ற ஸ்பெயின், அதன் பிறகும் பிரான்ஸ் அணிக்கு சமநிலை கோல் அடிக்கும் எந்தவிதமான இடத்தையும் வழங்கவில்லை. ஒழுங்கான ஆட்டத்தால் பிரான்ஸ் வீரர்களின் முயற்சிகள் அனைத்தையும் முறியடித்தது.
இதனைத் தொடர்ந்து 58-வது நிமிடத்தில் பெட்ரோ போரோ அடித்த அற்புதமான கோல், ஸ்பெயினின் முன்னிலையை 2-0 ஆக உயர்த்தியது. அதன்பிறகும் பிரான்ஸ் அணி பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டாலும், ஸ்பெயினின் தற்காப்பு அரணை உடைக்க முடியவில்லை.
90+7 நிமிடங்கள் வரை நீடித்த இந்த போட்டியின் முடிவில், 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஸ்பெயின் அணி உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
2010-ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற பிறகு, அடுத்தடுத்த தொடர்களில் குழு சுற்று மற்றும் ரவுண்ட் ஆஃப் 16-இல் வெளியேறியிருந்த ஸ்பெயின், தற்போது 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று புதிய வரலாறு படைத்துள்ளது.

