காதல் ஆசை யாரை விட்டதோ? 3,400 லிப்ஸ்டிக் முத்தங்களால் அலங்கரிக்கப்பட்ட கார்!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், காதலியின் ஆசைக்காக தனது வெள்ளை நிற கார் முழுவதும் சுமார் 3,400 சிவப்பு நிற லிப்ஸ்டிக் முத்தக் குறிகளை பதித்து சாலையில் ஓட்டிச் சென்ற இளைஞருக்கு காவல்துறை அபராதம் விதித்துள்ளது.

காதலியின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், காரின் வெளிப்புறம் முழுவதும் லிப்ஸ்டிக் முத்தக் குறிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த கார் நகரின் முக்கியச் சாலையில் சென்றபோது, அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளின் கவனத்தை பெருமளவில் ஈர்த்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, போக்குவரத்து காவல்துறையினர் அந்த காரை வழிமறித்து சோதனை செய்தனர். வாகனத்தின் தோற்றத்தை விதிகளுக்கு மாறாக மாற்றியமைத்ததாகக் கூறி, மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் அந்த இளைஞருக்கு ரூ.5,500 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், காரில் பதிக்கப்பட்டிருந்த அனைத்து லிப்ஸ்டிக் முத்தக் குறிகளையும் அந்த இளைஞரையே வைத்து காவல்துறையினர் துடைத்து அகற்றச் செய்தனர்.

காதலியின் ஆசையை நிறைவேற்ற நினைத்த இளைஞருக்கு, இறுதியில் 3,400 முத்தங்களும் ரூ.5,500 அபராதமும் கிடைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *