“லஞ்சத்தை மரியாதையாக கொடுக்கலாமே..” – கர்நாடக காங். அமைச்சரின் புது ஐடியா..!
சிறப்பாக பணியாற்றும் அதிகாரிகளுக்கு மரியாதையாக லஞ்சம் கொடுப்பதில் தவறில்லை என கர்நாடக அமைச்சர் சிவலிங்க கௌடா தெரிவித்துள்ளார்
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள சக்லேஷ்பூரில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் அம்மாநில கலால் துறை அமைச்சரும் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சருமான சிவலிங்க கெளடா கலந்துகொண்டார்.
அப்போது அங்குள்ள மக்கள் அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டு கட்டாயப்படுத்துவதாக அமைச்சரிடம் முறையிட்டனர்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கௌடா, “அதிகாரிகள் தங்கள் வேலையை சிறப்பாக செய்தால், லஞ்சம் கொடுப்பதில் தவறில்லை. நீங்கள் வழங்க விரும்பினால், அதனை மரியாதையுடன் செய்யலாம். அது உங்கள் கடமை. ஆனால் யாரும் கட்டாயப்படுத்திப் பணத்தைப் பெறக்கூடாது” என்றார்.
அமைச்சரின் பேச்சை அடுத்து அப்பகுதியிலிருந்த மக்கள் உடனடியாக “நாங்கள் ஏன் லஞ்சம் கொடுக்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினர். பலரும் அமைச்சரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், உடனடியாக தனது கருத்தை மாற்றி, “நான் லஞ்சம் கொடுக்கச் சொல்லவில்லை. மரியாதைதான் கொடுக்கச் சொன்னேன்” என்றார்.
அமைச்சர் சிவலிங்க கெளடாவின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து கர்நாடக பாஜக விமர்சித்துள்ளது. இதுகுறித்து பாஜகவின் அதிகாரப்பூர்வ அறிக்கையில்

“லஞ்சம் கோரும் காங்கிரஸ் அரசின் உண்மையான முகத்தை அமைச்சர் சிவலிங்க கெளடாவின் பேச்சு வெளிப்படுத்தியுள்ளது. லஞ்சம் கொடுப்பது ஒரு கடமை என்று கூறும் அமைச்சர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டியுள்ளனர்.
பணம் பறிப்பதே அரசின் ஒரே வேலை என்பதை அவர்கள் உணர்ந்துவிட்டனர். சாமானிய மக்களின் பணத்தை பறிப்பது சரி என்று கற்பிக்கும் காங்கிரஸுக்கு, மாநில மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளது.

